தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேய் வேடமிட்ட பெண்ணைத் துரத்திய நாய்

1 mins read
d7bc904c-760e-42a0-80ed-d65951d5fc67
ஹலோவீன் கொண்டாட்டத்தை ஒட்டி ‘ரீல்ஸ்’ வெளியிடுவதற்காக அந்தப் பெண் பேய் வேடமிட்டதாகக் கூறப்படுகிறது. - படங்கள்: தினத்தந்தி

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியைச் சேர்ந்த ஷைஃபாலி நேக்பால் என்ற பெண் ஹலோவீன் விழாவை ஒட்டி, பிறரைப் பயமுறுத்த மேற்கொண்ட முயற்சியின் இறுதியில் அவரே பயந்து ஓடவேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பனைக் கலைஞரான ஷைஃபாலி, பேய் வேடமிட்டுத் தெருக்களில் உலா வந்தார். அதை ‘ரீல்ஸ்’க்காகக் காணொளியாகவும் பதிவு செய்தார்.

சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ மூலம் காணொளிகளை வெளியிடும் போக்கு இப்போது பரவலாகியுள்ளது.

இந்நிலையில், உடையில் ரத்தச் சிவப்பு சாயம் பூசி, கண்களில் விழி ஒட்டுவில்லை பொருத்திக்கொண்டு, தலைவிரி கோலத்துடன் ஷைஃபாலி சாலைகளில் உலா வந்தார்.

கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி நகர் சாலையில் உலா வந்து குழந்தைகளையும் பெண்களையும் அவர் பயமுறுத்த முயன்றார்.

அவரைப் பொதுமக்கள் வியந்து பார்த்த வேளையில், எதிர்பாராவிதமாக நாய் ஒன்று அவரைத் துரத்தத் தொடங்கிவிட்டது.

ஷைஃபாலி பயந்து அலறியதும் நாய் விடாமல் அவரை விரட்டி விரட்டிக் குரைத்ததும் காணொளியில் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறின.

பார்வையாளர்களைச் சிரிக்க வைத்துள்ள இந்தக் காணொளி இணையத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

காணொளிக்குப் பலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் முன்பு இதுபோன்ற செயல்களைச் செய்யாதீர்கள் என்று சிலர் கருத்துரைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்