புதுடெல்லி: நாடு முழுவதும் தெருநாய்த் தொல்லையைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்திலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதையடுத்து, உணவுக்காக நாய்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் மிச்சமான உணவை மூடிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நடைமுறையை உறுதிசெய்ய அதிகாரிகள் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் தெருநாய்கள் சுற்றித்திரிவதாக கவலை தெரிவித்தனர்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“வாயில்லா பிராணிகள் மீதான இந்த நடவடிக்கை கொடூரமானது, இரக்கமற்றது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மனிதாபிமான, அறிவியல்பூர்வமாக பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த கொள்கையில் இருந்து பின்வாங்குவது போன்றது,” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.