புதுடெல்லி: இந்தியத் தற்காப்புத் துறையின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது ‘ஏகே-203’ ‘ஷெர்’ ரகத் தாக்குதல் துப்பாக்கி வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் இயங்கிவரும் ‘இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட்’ கூட்டு நிறுவன ஆலையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்திய, ரஷ்ய கூட்டு முயற்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலையில், நூறு விழுக்காடு இந்திய உதிரிப் பாகங்கள், உள்நாட்டுப் பொருள்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் முதல் தயாரிப்பாக ‘ஏகே-203’ துப்பாக்கி முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.கே. சர்மா கூறுகையில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது மிகவும் பெருமைமிக்க தருணம் என்றார்.
முழுமையாக உள்நாட்டுப் பொருள்களால் தயாரான முதல் ‘ஏகே-203’ ‘ஷெர்’ துப்பாக்கியை வெற்றிகரமாகச் சுட்டுப்பார்த்து, பல வகைகளில் பயன்படுத்திச் சோதித்துள்ளதாகவும் அடுத்தகட்டமாக, வரும் செப்டம்பர் மாதம் இந்திய ராணுவத்தின் களப் பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கத் தேவையான எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தி்ரு சர்மா தெரிவித்துள்ளார்.
எரிவாயு மூலம் இயங்கும் நவீனத் தாக்குதல் துப்பாக்கியாக ‘ஏகே-203’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எதிரிகளின் இலக்குகளை 800 மீட்டர் தொலைவு வரை சென்று மிகத் துல்லியமாகத் தாக்கக் கைகொடுக்கும்.


