அமெரிக்கப் பெருநிறுவனங்களின் நிர்வாக உயர் பதவிகளில் இந்தியர்களின் ஆதிக்கம்

அமெரிக்கப் பெருநிறுவனங்களின் நிர்வாக உயர் பதவிகளில் இந்தியர்களின் ஆதிக்கம்

படம்: வாட்சர்.குரு / இன்ஸ்டகிராம்

28 Sep 2026 - 5:08 pm

2 mins read

புதுடெல்லி: அமெரிக்காவின் முன்னணி பெருநிறுவனங்களின் நிர்வாக உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருகிறது.

‘ஃபார்ச்சூன் 500’, ‘எஸ் அண்ட் பி 500’ (S&P 500) பட்டியலில் உள்ள நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள இந்தியர்களின் பங்களிப்பு 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

2026ஆம் ஆண்டில் மட்டும் வால்மார்ட், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், வெஸ்டர்ன் டிஜிட்டல் உள்ளிட்ட முக்கியமான அமெரிக்க நிறுவனங்களின் வாரியங்களில் 16 இந்திய வம்சாவளி ஆண்கள் புதிதாக இணைந்து சாதனை படைத்துள்ளனர்.

வெள்ளையின ஆண்கள், பெண்களைத் தவிர்த்துப் பார்த்தால், பிற சமூகத்தினரைக் காட்டிலும் இந்தியர்களே அதிக அளவில் இந்த முக்கியப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கப் பெருநிறுவனங்கள் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி அனுபவம் கொண்டவர்களுக்கே நிறுவன இயக்குநர் போன்ற நிர்வாக உயர் பதவிகளில் முன்னுரிமை, முதலிடம் அளிக்கின்றன. அந்நாட்டில் நீண்டகாலம் பணியாற்றி உயர் பதவிகளை அடைந்த இந்தியத் தலைவர்கள், இத்தகைய செயல்பாட்டுத் திறமை, நிர்வாக அனுபவத்தை அதிகளவில் கொண்டுள்ளனர்.

தற்சமயம் அமெரிக்க நிறுவனங்களில் உள்ள இந்தியர்களில் 77 விழுக்காட்டினர் தொழில் செயல்பாட்டுப் பின்புலம் கொண்டவர்களாகவும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கினர் அத்தகைய உயர் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களாகவும் உள்ளனர்.

ஆல்ஃபாபெட், மைக்ரோசாஃப்ட், பிராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களை இந்திய வம்சாவளியினர் வெற்றிகரமாக வழிநடத்தி வருவது அமெரிக்க பெருநிறுவன உலகில் இந்தியர்களின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

குடியேற்றக் கொள்கைகளில் மாற்றங்கள், பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்தியத் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் இடர்களைக் கையாளும் திறனும் அமெரிக்க வணிக உலகின் உச்சகட்ட முடிவெடுக்கும் தளங்களில் அவர்களைத் தொடர்ந்து முன்னிலையில் நிறுத்துகின்றன.

நடப்பாண்டிலும் இதே போக்கு நீடிக்கிறது. முன்னிலைப்படுத்தப்படும் இந்தியர்களில் மூன்றில் இருவர் தற்போதைய அல்லது முன்னாள் தலைமைச் செயல் அதிகாரிகளாக பொறுப்பில் உள்ளனர்.

அவர்களில் ஸ்ட்ரைக்கர் கார்ப், லிண்டே பிஎல்சி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் அண்மையில் ஓய்வுபெற்ற ஆல்பர்ட்சன்ஸ் காஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்