புதுடெல்லி: உலக அளவிலான விளையாட்டுகளில் ஊக்கமருந்து மோசடியில் ஈடுபடும் வீரர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஊக்கமருந்து எதிர்ப்பு உலக முகவை (WADA) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா முதலிடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளிலும் ஊக்கமருந்து மோசடியில் அது முதலிடத்திலேயே பட்டியலிடப்பட்டது.
இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவை (NADA) கடந்த ஆண்டு விளையாட்டு வீரர்களிடம் இருந்து 7,113 சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்தது என்றும் அவற்றில் 260 மாதிரிகளில் ஊக்கமருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்றும் உலக அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிட்டது.
இந்த அவப்பெயர், 2030ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இருக்கும் இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் 76 திடல்தட வீரர்கள், 43 பழுதூக்கும் வீரர்கள், 29 மற்போர் வீரர்கள் ஆகியோர் ஊக்கமருந்து அருந்தியது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டின் ஊக்கமருந்து மோசடியில் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் பிரான்சும் மூன்றாம் இடத்தில் இத்தாலியும் இடம்பெற்றன.
உலக அமைப்பின் ஆண்டறிக்கை வெளியான பின்னர் இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவை இந்தியாவைத் தற்காத்து அறிக்கை வெளியிட்டது.
“அண்மைய ஆண்டுகளில், ஊக்கமருந்துக்கு எதிரான தனது கட்டமைப்பை இந்தியா வலுப்படுத்தி வருகிறது,” என்று அது புதன்கிழமை (டிசம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. ஊக்கமருந்து சாப்பிட்டு விளையாட்டுகளில் பங்கேற்கும் தவறான பழக்கத்தைச் சமாளிக்க தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவை பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் அதேநேரம் அந்தப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தையும் நடத்தி வருகிறது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டு 7,068 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அவற்றில் 110 பரிசோதனை முடிவுகள் ஊக்கமருந்து கலந்திருந்ததைக் காட்டியதாகவும் அது கூறியது.
கடந்த ஜூலை மாதம் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான மற்போர் வெற்றியாளரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் காலிறுதிக்குத் தகுதிபெற்றவருமான ரீத்திகா ஹூடாவிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து உண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மற்போர் விளையாட்டிலிருந்து அவர் தற்காலிமாக நீக்கப்பட்டார்.

