புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2024ஆம் ஆண்டு 5,737 வரதட்சணை மரணங்கள் பதிவாகி இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இதுபோன்ற மரணங்களின் எண்ணிக்கை சற்றே சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் 7,634 பெண்கள் உயிரிழந்துவிட்ட நிலையில், பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2024ல் மரண எண்ணிக்கை 5,737 ஆகக் குறைந்துள்ளது.
ஏறக்குறைய 1,900 மரணங்கள் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்ணிக்கை குறைந்தது ஆறுதல் அளித்தாலும், இப்போதும்கூட நாள்தோறும் 15க்கும் மேற்பட்ட பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இந்தியாவில் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழக்கிறார். குறிப்பிட்ட சில மாநிலங்களிலேயே மிக அதிக அளவில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
“குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் கடந்த 2024ல் 2,038 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த வரதட்சணை மரணங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்,” என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பீகாரில் 1,078 மரணங்களும் மத்தியப் பிரதேசத்தில் 450 மரணங்களும் பதிவாகியுள்ளன. ராஜஸ்தான் (386), மேற்கு வங்கம் (337) மாநிலங்களும் இந்த வரிசையில் முன்னிலையில் உள்ளன.

