புதுடெல்லி: பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையை வேகமாக முடிப்பதற்கு ஏதுவாக விரைவு நீதிமன்றங்களை அமைப்பது, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது உள்ளிட்ட அம்சங்களுடன் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கட்கிழமை (ஜூலை 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.
மக்களவை உறுப்பினர்களுக்கு அந்த மசோதா நகல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
புதிய மசோதா, வினாத்தாள் கசிவு முறைகேட்டு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறது.
அத்துடன், “வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.
“மேலும், ரூ. 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். திட்டமிட்டு பொதுத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறையும் ரூ. 10 கோடி வரையிலான அபராதமும் விதிக்கப்படும்,” என்று அந்த சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான சிறைத் தண்டனை வழங்கப் பரிந்துரைக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
பொதுத் தோ்வு முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை இந்த சட்டத்திருத்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக மன்றத்தின் கூட்ட நிகழ்வுகளில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதனால், திங்கட்கிழமை சட்டத்திருத்த மசோதா அமைதியான முறையில் தாக்கல் செய்யப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

