திருக்கழுக்குன்றம்: கல்பாக்கத்தில் அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லமாட்டீர்களா என கேள்வி கேட்ட பெண்ணைத் தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அப்பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அப்பெண்ணைத் தாக்க முயன்றனர்.
கல்பாக்கம் அருகே விட்டிலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், புதன்கிழமை காலை சென்னை சென்றிருந்தார். மாலை வீடு திரும்புவதற்காக, இசிஆர் சாலையில் பனையூர் சுங்கச்சாவடி அருகே கல்பாக்கம் செல்லும் அரசு பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசுப் பேருந்து வந்தது. அதில், கல்பாக்கம் செல்ல வேண்டும் என்று அப்பெண் கேட்டதற்கு, கல்பாக்கத்தில் பேருந்து நிற்காது என்று நடத்துநர் கறாராக கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார். பின்னர் அப்பெண் வேறொரு அரசுப் பேருந்து மூலமாக கல்பாக்கம் சென்று சேர்ந்துள்ளார்.
அங்கு தன்னை பனையூரில் ஏற்றாமல் கல்பாக்கத்தில் நின்றிருந்த அதே அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநரிடம் அப்பெண் நியாயம் கேட்டிருக்கிறார்.
அதனால் ஆத்திரமடைந்த அப்பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அப்பெண்ணைத் தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், அவரைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் பயணிகளும் காணொளியாகப் படம்பிடித்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். தற்போது அக்காணொளி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து, “பெண் பயணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுகூட தெரியாத நடத்துநர், ஓட்டுநர் மீது சம்பந்தப்பட்ட அரசுப் போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் பேருந்தில் அனைத்துப் பயணிகளையும் ஏற்றிச் செல்வதுடன் மரியாதையுடன் நடத்த வேண்டும்,” என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.