ஓமானில் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்; இந்தியர்கள் இருவர் மரணம், 10 பேர் காயம்

ஓமானில் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்; இந்தியர்கள் இருவர் மரணம், 10 பேர் காயம்

2 mins read
fa3e20ec-32f1-4d6d-9337-28775d5af7b0
சோஹார் நகரில் நடந்த தாக்குதலில் இந்தியர் இருவர் கொல்லப்பட்டதை வெளியுறவு அமைச்சின் (வளைகுடா) இணைச் செயலாளர் அசீம் மகாஜன் உறுதிப்படுத்தினார். - கோப்புப்படம்: ஃபிக்கி
Google News Preferred Icon

மஸ்கட்: ஓமான் நாட்டின் தொழிற்பகுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) நிகழ்ந்த ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தாக்குதலில் இந்தியர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அண்மை மோதலில், மேற்கு ஆசிய நாடு ஒன்றின் நிலப்பரப்பில் இந்தியர்கள் உயிரிழந்தது இதுவே முதன்முறை.

தலைநகர் மஸ்கட்டிலிருந்து ஏறக்குறைய 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோஹார் நகரின் அல் அவாஹி தொழிற்பேட்டையில் அத்தாக்குதல் நடத்தப்பட்டது.

சோஹார் நகரில் நடந்த தாக்குதலில் இந்தியர் இருவர் கொல்லப்பட்டதை வெளியுறவு அமைச்சின் (வளைகுடா) இணைச் செயலாளர் அசீம் மகாஜன் உறுதிப்படுத்தினார்.

“மாண்டோரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்த 11 பேரில் 10 பேர் இந்தியர்கள். அவர்களில் ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தங்குமிடத்திற்குத் திரும்பிவிட்டனர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பத்துப் பேரில் எவருக்கும் கடுமையான காயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை ஈராக்கின் பஸ்ரா நகர் அருகே தாக்கப்பட்ட அமெரிக்காவிற்குச் சொந்தமான ‘சேஃப்சீ விஷ்ணு’ எண்ணெய்க் கப்பலில் இருந்த 15 இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அந்நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அக்கப்பல் தாக்குதலில் பலியான இந்திய ஊழியரின் உடலைத் தாய்நாட்டிற்குத் கொண்டுவரவும், மீட்கப்பட்ட மற்ற 15 மாலுமிகளைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பவும் இந்தியத் தூதரகக் குழுவினர் பணியாற்றி வருவதாகத் திரு மகாஜன் கூறினார்.

கடந்த பிப்ரவரி 28 முதல் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து இதுவரை 150,000 இந்தியர்கள் நாடுதிரும்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதுவரை நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி, ஏவுகணைத் தாக்குதல்களில் 36க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காயமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
வளைகுடாதாக்குதல்ஓமான்