திருப்பதி கோவில் பாதுகாப்பில் ஆளில்லா வானூர்திகள்

1 mins read
83d6d476-009f-4850-b520-5c7eaf112127
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மேலுள்ள வான்வெளியை ‘பறப்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட பகுதியாக’ அறிவிக்கும்படி கோவில் நிர்வாகம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: உலகின் பணக்காரக் கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்படும் நிலையில், அதன் பாதுகாப்பிற்கு ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு தலைமையில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. கோவிலைச் சுற்றி ஆளில்லா வானூர்திகள் பறப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், அண்மைய மாதங்களில் அங்குச் சில பாதுகாப்பு விதிமீறல்கள் நிகழ்ந்தன. ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தி கோவிலையும் அதன் சுற்றுப்பகுதியையும் படம்பிடித்ததாகக் கூறி, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டார்.

அதேபோல, சென்ற ஆண்டில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் திருமலைக்குச் செல்லும் சாலையில் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, கோவிலுக்கு மேலுள்ள வான்வெளியை ‘பறப்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட பகுதியாக’ அறிவிக்குமாறு திருப்பதி கோவில் நிர்வாகம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

கோவிலுக்கு மேலுள்ள வான்பகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகள், அதன் புனிதச் சூழலுக்கு இடையூறாக இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்