வறட்சி நிதி: ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் உயரதிகாரிகள்

வறட்சி நிதி: ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் உயரதிகாரிகள்

படம்: என்டிடிவி

17 Oct 2026 - 5:53 pm

2 mins read

மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவுவதால் அம்மாநில விவசாயிகள் மிகுந்த பொருளியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட அம்மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்துள்ளனர். அதன்படி, அதிகாரிகள் தங்களின் ஒருநாள் சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கவுள்ளனர்.

மாநிலத்தின் துயர்துடைப்பு, மறுவாழ்வுத் துறை அண்மையில் 305 வட்டாட்சிப் பகுதிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த 305 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு உதவி வழங்கும் வகையில் அரசு பல முக்கியச் சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நில வருவாயிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். அவர்களின் பயிர்க்கடன்கள் திருத்தியமைக்கப்படும். அனைத்து வகையான விவசாயக் கடன் வசூலும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. நிலங்களுக்கான நீர்ப்பாசன மின்கட்டணத்தில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும்.

அத்துடன், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தேர்வுக்கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும். இதனால், பொருளியல் நெருக்கடியால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாது.

இந்நிலையில், தங்களது ஒருநாள் சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிப்பது தொடர்பாக அதிகாரிகளின் அமைப்பு மாநில அரசிடம் கடிதம் வழங்கியுள்ளது.

மற்றொருபுறம், ஆட்சியாளர்களும் தங்கள் பங்கிற்கு உதவிக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளனர். சிப்லுன்-சங்கமேஷ்வர் தொகுதி எம்எல்ஏ சேகர் நிகாம், தமது ஒரு மாத அடிப்படைச் சம்பளத்திற்கான காசோலையைத் துணை முதல்வர் சுனித்ரா பவாரிடம் வழங்கினார்.

இதனிடையே, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டருக்குக் குறைந்தது 50,000 ரூபாயும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 25,000 ரூபாயும் உடனடி நேரடி நிதியுதவியாக வழங்க வேண்டும் என்று ரோகித் பவார் எம்எல்ஏ மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்