பெங்களூரு: பெங்களூரின் கண்ணன்மங்களா கேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 31 தனிநபர்களைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டது கண்டறியப்பட்டது.
கைதுசெய்யப்பட்டோரில் ஏழு பேர் பெண்கள். அவர்களில் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர் என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியது.
ஞாயிற்றுக்கிழமை (மே 25) அதிகாலை சுமார் 5 மணியளவில் தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்றுக்கொண்டிருந்த கொண்டாட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அந்தக் கொண்டாட்டத்தில் போதைப் பொருளை விநியோகம் செய்வோரும் போதைப் பொருள் புழங்கிகளும் இருந்ததாகத் துணை காவல்துறை ஆணையர் வி ஜெ சஜீத் கூறினார். கைதானோரின் சிறுநீர், இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
தொடக்கக் கட்ட விசாரணையில் 31 பேர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரியவந்தது என்ற திரு சஜீத், “குறைந்த அளவில் கொக்கைன், ஹஷிஷ், கஞ்சா ஆகிய போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டன,” என்றார்.
போதைப் பொருள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். கூடுதல் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் கண்டறியப்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிப்ரவரியிலிருந்து பெங்களூரின் மத்திய குற்றவியல் பிரிவு போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான முயற்சிகளைத் தீவிரப்படுத்திவருகிறது.