திருவனந்தபுரம்: வேலை கிடைப்பதற்கு நல்ல கல்வித் தகுதி மட்டும் போதாது, நல்ல பழக்க வழக்கங்களும் முக்கியம் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது இந்தியாவின் கேரள மாநிலத்தில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் நடைமுறை.
தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ‘டெக்னோபார்க்’கில் செயல்படும் பல நிறுவனங்களும் ஆட்சேர்ப்பில் போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
கேரளத்தில் செயல்படும் 250 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான ஜி-டெக் இம்முடிவை எடுத்துள்ளது.
போதைப்பொருள் புழங்குவோரை வேலைக்குப் பரிசீலிப்பதில்லை என்பதில் ஜி-டெக் உறுதியாக இருக்கிறது.
“விழிப்புணர்வுப் பிரசாரம் என்ற கட்டத்தையெல்லாம் தாண்டிவிட்டோம். செயலில் இறங்குவதற்கான நேரம் வந்துவிட்டது,” என்கிறார் ஜி-டெக் செயலாளர் வி. ஸ்ரீகுமார்.
அந்த 250 நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பம் செய்வோர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு, மருத்துவச் சான்றிதழ் அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

