சண்டிகர்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு மேற்கொண்டுவரும் ‘போதைப்பொருளுக்கு எதிரான போர்’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, போதைக்கு அடிமையான 10,000க்கும் மேற்பட்டோர்க்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொந்தப் பயன்பாட்டிற்காகக் குறைந்த அளவில் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் போதைக்கு அடிமையான 10,656 பேர், சிறைத்தண்டனையை எதிர்கொள்வதற்குப் பதிலாக மறுவாழ்வு மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (ஜூலை 9) வெளியிடப்பட்ட அதிகாரத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 மார்ச் 1 முதல் 2026 ஜூலை 6 வரையிலான காலகட்டத்தில், போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாப் காவல்துறை 51,516 வழக்குகளைப் பதிவுசெய்து, 67,519 பேரைக் கைதுசெய்துள்ளது. அதே வேளையில், போதைக்கு அடிமையான 10,000க்கும் மேற்பட்டோர் அரசு நடத்தும் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போதைக்கு அடிமையானவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெறும்போது அவர்களுக்குச் சட்டபூர்வத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
“போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் என்பது கடத்தல்காரர்களைக் கைதுசெய்வதோடு முடிந்துவிடுவதில்லை. போதையில் சிக்கியவர்கள் மீண்டுவர வாய்ப்பளிப்பதையும் அது உள்ளடக்குகிறது,” என்று பஞ்சாப் மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.
இளையர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும் நோக்கில், அவர்களை முடிந்த அளவிற்கு விரைவில் போதையின் பிடியிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை உறுதிசெய்ய கடப்பாடு கொண்டுள்ளோம் என்றும் அவர் சொன்னார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், போதைக்கு அடிமையான பாதிக்கப்பட்டவர்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என்று கூடுதல் தலைமை இயக்குநர் நிலாப் கிஷோர் குறிப்பிட்டார்.
போதைப்பொருளுக்கு எதிரான போரில், கடத்தல்காரர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கருணையுடன் கூடிய மறுவாழ்வு சிகிச்சை என இருமுனை உத்தியைப் பஞ்சாப் அரசு கையாண்டு வருகிறது.

