போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஓர் அங்குலம்கூட இடம் கிடைக்கக்கூடாது: அமித்ஷா

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஓர் அங்குலம்கூட இடம் கிடைக்கக்கூடாது: அமித்ஷா

2 mins read
271aa67a-8190-4f5f-b11f-1060350e42e6
அமித்ஷா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ராய்ப்பூர்: கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 586 பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புக் கட்டமைப்பை இந்திய அரசு வலுப்படுத்தி உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளால் 2014ஆம் ஆண்டு 126ஆக இருந்த நக்சலைட் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் எண்ணிக்கை, இன்று வெறும் 11ஆகக் குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

60வது அகில இந்திய காவல்துறை இயக்குநர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தொடங்கியது.

சனிக்கிழமை (நவம்பர் 29) இம்மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் அமித்ஷா, அடுத்த மாநாட்டிற்கு முன்பு நக்சலிச அச்சுறுத்தலில் இருந்து நாடு முற்றிலும் விடுபடும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

நக்சல் பாதிப்புள்ள நாட்டின் வடகிழக்குப் பகுதிகளும் ஜம்மு காஷ்மீரும் புண்ணாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றுக்கு இந்திய அரசு நிரந்தரத் தீர்வுகளை வழங்கியுள்ளது என்றார்.

தேசிய புலனாய்வு அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் வழக்குகளில் சிக்கியவர்கள், பல்வேறு வழக்குகளில் தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பல முழுமை அடையும்போது, இந்தியாவில் காவல்துறை மிக நவீனமானதாக மாறும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

“பயங்கரவாதம், போதைப்பொருள் தொடர்பாக 360 டிகிரி தாக்குதலைத் தொடங்க வேண்டும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகளுக்கு இந்த நாட்டில் ஓர் அங்குலம்கூட இடம்கிடைக்காத ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். மாநில காவல் படைகள், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

“மாநில, தேசிய, அனைத்துலக அளவில் செயல்படும் போதைப்பொருள் கும்பல்களை கடுமையாகத் தாக்கி, அவர்களின் மூளையாக இருப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும்,” என்று அமித்ஷா வலியுறுத்தினார்.

மத்திய அரசு ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைத் தடை செய்த பிறகு, நாடு தழுவிய அளவில் அவர்களின் மறைவிடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மத்திய-மாநில ஒருங்கிணைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் திரு அமித்ஷா மேலும் தெரிவித்தார்.

மூன்று நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு சிறந்த காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்