போதைப்பொருள்கள் கடத்தல்: ஐந்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிப்பு

2 mins read
f3e3ff40-f093-4748-834d-c4fca872b72c
கடந்த 2020ஆம் ஆண்டு 1,704 கிலோ அளவுக்குப் பிடிபட்ட போதைப் பொருள்களில் ஒன்றான மெத்தம்பெட்டமைன், 2024ஆம் ஆண்டு 8,406 கிலோவாக அதிகரித்தது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் போதைப்பொருள் கடத்தல் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும், போதைப்பொருள் தடுப்பு அமைப்புகள் அவற்றின் கடத்தல், புழக்கம் தொடர்பான விரிவான ஆய்வு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முக்கியப் புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

நிலப் பகுதிகளைவிட கடற்பகுதியில் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அது உணர்த்துவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு 1,704 கிலோ அளவுக்குப் பிடிபட்ட போதைப்பொருள்களில் ஒன்றான மெத்தபெட்டமைன், 2024ஆம் ஆண்டு 8,406 கிலோவாக அதிகரித்துள்ளது.

இதேபோல் 2019ஆம் ஆண்டு, ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் மெத் ஆம்பெட்டமைன் போன்ற போதைப் பொருள்கள், 1,890 கிலோ அளவுக்கு கைப்பற்றப்பட்டன. இதுவே, 2024ல் ஆறு மடங்காக அதிகரித்து 11,994 கிலோவாக இருந்தது.

உலகிலேயே அதிக அளவு போதைப் பொருள் தயாரிக்கும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியா அமைந்திருக்கிறது.

தெற்காசியா, தென்கிழக்காசியா, மேற்காசிய நாடுகளில் போதைப் பொருள் சந்தை அசுர வேகத்தில் வளர்ந்து வருவதும் கடத்தல் அதிகரிக்கக் காரணம்.

உலக வரைப்படத்தில் ஹெராயின், ஏடிஎஸ் எனப்படும் அம்பெட்டமைன், மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருள்களை அதிக அளவில் தயாரிக்கும் நாடுகளை ‘டெத் கிரசன்ட்’ நாடுகள் என வகைப்படுத்தி உள்ளனர்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன.

போதைப்பொருள் விநியோகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள மியன்மார், லாவோஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளன. எனவேதான் இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாகத் தென்னிந்திய மாநிலங்களிலும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்