போதைப்பொருள்: தமிழகத்தில் எட்டு இடங்களில் ‘என்ஐஏ’ திடீர் சோதனை

போதைப்பொருள்: தமிழகத்தில் எட்டு இடங்களில் ‘என்ஐஏ’ திடீர் சோதனை

படம்: தினமணி

13 Aug 2026 - 11:23 am

1 mins read

புதுடெல்லி: என்ஐஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தமிழ்நாட்டில் எட்டு இடங்களிலும் மிசோரம் மாநிலத்தில் ஐந்து இடங்களிலும் என 13 இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தியது.

மியன்மாருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கட்டமைப்பு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அந்தச் சோதனை இரு மாநிலங்களிலும் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில், சென்னையில் நந்தனம், வண்ணாரப்பேட்டை, திருமங்கலம் மற்றும் போரூர் உள்ளிட்ட ஆறு இடங்களிலும் மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தலா ஓர் இடத்திலும் சோதனைகள் நடைபெற்றன.

கடந்த 2024ஆம் ஆண்டு அந்தமான் கடலில் மியன்மாரில் பதிவு செய்யப்பட்ட ஒரு படகிலிருந்து கைப்பற்றப்பட்ட 6,016.87 கிலோ ‘மெத்தம்ஃபெட்டமைன்’ போதைப்பொருள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவும் அந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த வழக்கு தொடர்பாக ஆறு மியன்மார் நாட்டினர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள கும்பல்களுக்கும் இடையே சந்தேகத்திற்குரிய தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மியன்மார் மற்றும் அதன் அண்டை வட்டாரங்களிலிருந்து செயல்படும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் இந்தியாவைச் சேர்ந்தோருடன் இருக்கும் தொடர்பு குறித்தும் என்ஐஏ விசாரிக்கிறது.

மியன்மார், இந்தியா கும்பல்களுக்கு இடையிலான நிதிப் பரிமாற்றத்தையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் சோதனைகள் நிறைவடைந்த பின்னர் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்மியன்மார்கடத்தல்