புதுடெல்லி: விமானம் மூலம் டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து டெல்லி அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்த பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது பயணிகளில் ஒருவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அவரது பெட்டி, கைப்பையைச் சோதனை செய்த போது அதில் ஒன்பது பெரிய உறைகள் காணப்பட்டன. இந்தியரான அந்தப் பயணி, அதிகாரிகளின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர் மீதான சந்தேகம் வலுத்தது.
அவர் வைத்திருந்த உறைகளைக் காவல்துறையினர் திறந்து பார்த்தபோது அதில் மரிஜுவானா போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதைக் கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் பயணியைக் கைது செய்தனர்.
42 கிலோ ஹெராயின் பறிமுதல்:
இதனிடையே, பஞ்சாப் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது 42 கிலோ ‘ஹெராயின்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அமிர்தசரஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது நான்கு கையெறி குண்டுகள், ஒரு துப்பாக்கி, வெடி மருந்துகள் சிக்கின.
இதுதொடர்பாக அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த இருவர் கைதான நிலையில் மேலும் ஒருவருக்கு காவல்துறை வலை வீசியுள்ளது.
இந்த ஹெராயின் போதைப்பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யாருக்கெல்லாம் கடத்தலில் தொடர்பு உள்ளது எனப் பஞ்சாப் காவல்துறை விசாரித்து வருகிறது.

