மும்பையில் ரூ.1,745 கோடி போதைப்பொருள் பறிமுதல்

மும்பையில் ரூ.1,745 கோடி போதைப்பொருள் பறிமுதல்

2 mins read
72805bc6-3660-4fb2-8c11-f4c23102ee74
சரக்​குக் கப்​பல், சரக்கு விமானங்​கள் மூலம்தான் அதிக அளவிலான போதைப்பொருள்கள் மும்​பைக்​குள் கடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

மும்பை: இந்தியாவின் பொருளியல் தலைநகரான மும்பையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது ரூ. 1,745 கோடி மதிப்புள்ள ‘கொக்கெய்ன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் 349 கிலோ ‘கொக்கெய்ன்’ பறிமுதல் செய்யப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறிய அளவி​லான போதைப்பொருள் கடத்​தல்​களைத் தொடர்ந்து கண்​காணித்து வந்ததன் பலனாக, மிகப்​பெரிய கடத்தல் கட்டமைப்பு கண்​டறியப்​பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் அமெரிக்​கா, ஆப்​பிரிக்க நாடு​கள் மட்டுமன்றி, ஐக்​கிய அரபுச் சிற்றரசுகள், துருக்​கி, ஃபிரான்ஸ் உள்​ளிட்ட பல்வேறு நாடு​களிலிருந்து இந்தியா​வுக்​குப் போதைப்பொருள்​கள் கடத்​தப்​படுகின்றன.

சரக்​குக் கப்​பல், சரக்கு விமானங்​கள் மூலம்தான் அதிக அளவிலான போதைப்பொருள்கள் மும்​பைக்​குள் கடத்​தப்​படு​வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்​பை மாநகருக்குள் பேரளவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக காவல்துறையின் அண்மைய ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, அங்கு மிகப்பெரிய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ‘கலம்​போலி’ பகு​தி​யில் ‘என்​சிபி’ அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு வந்த ஒரு சரக்கு வாக​னத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் 136 மூட்​டைகள் இருப்பது தெரியவந்தது.

அவற்றைத் திறந்து பார்த்தபோது, கிலோ கணக்கிலான ‘கொக்கெய்ன்’ சிக்கியது.

‘தானே’ மாவட்​டம் ‘பிவண்​டி’ பகுதி​யில் உள்ள கிடங்​கில் 213 மூட்​டைகளில் பதுக்கி வைக்கப்பட்​டிருந்த ‘கொக்கெய்ன்’ போதைப்பொருளையும் அதிகாரிகள் பறி​முதல் செய்​தனர்.

வெளி​நாடு​களிலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் இயந்​திரங்​களுக்​குள் போதைப்பொருளை மறைத்துவைத்து ஒரு கும்பல் இந்​தி​யா​வுக்​குக் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

அந்தக் கும்பலுடன் தொடர்பு உள்ளவர்களைத் தேடி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவால் தேடப்படும் குண்டர் கும்பல் தலைவன் தாவூத் இப்​ராகிம் தற்​போது பாகிஸ்தானில் தலைமறை​வாக இருப்பதாக நம்பப்படுகிறது.

அவரது நெருங்​கிய கூட்​டாளிகளில் ஒருவரான சலீம் டோலா அண்​மை​யில் துருக்​கி​யில் கைதாகி, பின்னர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பேரளவில் ‘கொக்கெய்ன்’ கைப்​பற்​றப்​பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்மும்பைகடத்தல்பறிமுதல்