அசாம்: வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
சாச்சார் மாவட்டத்தில் காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சில்தூபி பகுதியில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு வந்த ஒரு வாகனத்தை சோதனைச் செய்ததில் அதில் 415 கிராம் அளவிலான ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த போதைப் பொருளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அதை கடத்திய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறையினருக்கு முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.