விருதுநகர்: குடமுழுக்குப் பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்த நான்கு அர்ச்சகர்கள், போதையில் நடனமாடியது தொடர்பாக புகார்கள் எழுந்ததை அடுத்து, அவர்கள்மீது அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் வரும் ஜூலை 2ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதை அடுத்து, அர்ச்சகர்கள் சிலர் வரவழைக்கப்பட்டுள்ளுனர்.
அக்கோவிலில் உதவி அர்ச்சகராகப் பணிபுரியும் 30 வயதான கோமதிவிநாயகம் என்பவர் வீட்டில் அர்ச்சகர்கள் சிலர் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், மது அருந்திய நிலையில், நான்கு அர்ச்சகர்கள் ஆபாசமாக நடனமாடும் காணொளி வெளியானது.
முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் என்பவரின் மகன் சபரிநாதன் அந்தக் காணொளியை எடுத்துள்ளார். பின்னர் அதை அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பல்வேறு தரப்பினரும் எழுப்பிய கண்டனத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் தேதி பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டதும் மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதியானது.
மேலும், கோவில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள்மீது அர்ச்சகர்கள் சிலர் விபூதி அடித்து விளையாடும் காட்சிகள் கொண்ட மற்றொரு காணொளியும் வெளிவந்து பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தமிழக ஊடகங்கள் அந்தக் காணொளிகள் குறித்து பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளன.
தங்களைப் பற்றி அவதூறு பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்ட சபரிநாதன் மீது அர்ச்சகர் கோமதிவிநாயகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.