லக்னோ: விமானத்தில் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை மிஞ்சும் வகையில் இந்தியாவில் இப்போது இன்னொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவரின் தலையில் பயணச்சீட்டு பரிசோதகர் (டிடிஇ) சிறுநீர் கழித்தது பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசைச் சேர்ந்த அப்பெண், தம் கணவருடன் அகால் தக்த் விரைவு ரயிலில் பயணம் செய்தார். அந்த ரயில் அமிர்தசரசில் இருந்து கோல்கத்தா நோக்கிச் சென்றது.
இந்நிலையில், 'ஏ1' பெட்டியில் பயணம் செய்த அப்பெண்ணின் தலையில் நள்ளிரவு நேரத்தில் முன்னா குமார் என்ற பயணச்சீட்டுப் பரிசோதகர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னா குமார் அப்போது போதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அவரது செயலால் திடுக்கிட்டுப்போன அப்பெண் கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற பயணிகளும் அங்கு திரண்டு, முன்னா குமாரைப் பிடித்துக்கொண்டனர்.
ரயில் லக்னோ நகரிலுள்ள சார்பாக் ரயில் நிலையத்தை அடைந்ததும் அவர் ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னா குமார் இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின்போது அவர் பணியில் இருக்கவில்லை என்றும் அப்பெண் பயணியின் படுக்கைக்கு மேலிருந்த படுக்கையில் படுத்திருந்த அவர் போதை மயக்கத்தில் சிறுநீர் கழித்திருக்கலாம் என்றும் உயரதிகாரி ஒருவர் கூறியதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகச் செய்தி தெரிவித்தது.


