கேரளா: போதையில் இருந்த 26 ஊழியர்கள் வேலைநீக்கம்

கேரளா: போதையில் இருந்த 26 ஊழியர்கள் வேலைநீக்கம்

1 mins read
7dc9d657-0a16-4b76-8761-1f3ee5635f24
மாதிரிப்படம்: - இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: மது அருந்திவிட்டு வேலைக்கு வந்த 100 பேர்மீது கேரள அரசுப் போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தற்காலிகப் பணியாளர்கள் 26 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்; 74 நிரந்தரப் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் போதையில் வேலைக்கு வந்துள்ளனரா, பணியிடத்தில் மதுபானம் வைத்திருக்கிறார்களா என இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிவரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கண்காணிப்புப் பிரிவு சோதனை நடத்தியது.

அச்சோதனைகளின்போது மது அருந்தியிருந்ததாக அல்லது வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டவர்கள்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நிலைய மேலாளர் ஒருவர், வாகன மேற்பார்வையாளர்கள் இருவர், பாதுகாவலர் ஒருவர், 22 பேருந்து நடத்துநர்கள், 39 பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தவிர்த்து, ‘மது அருந்தியிருக்கவில்லை’ என்பதை உறுதிப்படுத்திய பிறகே மற்றவர்களுக்குப் பணிகளை ஒதுக்க வேண்டும் என்று மாநிலப் போக்குவரத்து அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்