மதுபோதையில் துரத்திய இளையர்கள்; லாரியில் ஏறித் தப்பித்த இளம்பெண்

மதுபோதையில் துரத்திய இளையர்கள்; லாரியில் ஏறித் தப்பித்த இளம்பெண்

2 mins read
ddcf1648-b818-45b7-883f-d1447a761ea2
கைதுசெய்யப்பட்ட ஐவர் மீது மானபங்கம், கொலைமுயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. - படம்: மலையாள மனோரமா

கொச்சி: நள்ளிரவு நேரத்தில் மதுபோதையில் துரத்திய இளையர்களிடம் சிக்காமல் லாரியில் ஏறி தப்பித்தார் ஓர் இளம்பெண்.

அந்தச் சம்பவம் எர்ணாகுளத்தில் உள்ள மூவாட்டுப்புழாவில் நிகழ்ந்தது.

லாரியில் ஏறித் தப்பித்த பெண் உடனடியாக அதிலிருந்தவாறே காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதனை அறியாத இளையர்கள் லாரியை மோட்டார்சைக்கிளில் துரத்தினர். இரும்புத் தடிகளால் லாரியை அடித்தவாறே 20 கிலோமீட்டருக்கு மேல் அந்த இளையர்கள் துரத்திச் சென்றனர்.

இரவுநேரச் சுற்றுக்காவலில் ஈடுபட்ட காவலர்கள் இடைமறித்ததும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

விசாரணைக்குப் பின்னர் ஐந்து இளையர்களைக் காவல்துறையினர் தேடினர். ஒருவழியாக மூவாட்டுப்புழா அருகே மாராடி என்னும் இடத்தில் அவரவர் வீட்டுக்குள் ஒளிந்திருந்த இளையர்களை அதிகாரிகள் கைது செய்தனர். அந்த இளையர்கள் அனைவரும் 20க்கும் 21க்கும் இடைப்பட்ட வயதினர்.

மூவாட்டுப்புழாவின் பிரவோம் ரோட்டில் இயங்கிவரும் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையத்தில் இளம்பெண் பணியாற்றுவது விசாரணையில் தெரியவந்தது. தமது குழந்தையின் உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்ததால் அவசரமாகப் புறப்பட்டு இரவு 11.30 மணியளவில் இரவுநேரப் பேருந்தில் ஏறச்சென்றபோது அந்தப் பெண்ணை இளையர்கள் துரத்தத் தொடங்கினர்.

முன்னதாக, அவர்கள் அனைவரும் மது அருந்தியிருந்தனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் இருந்த அவர்கள் இளம்பெண்ணைக் கண்டதும் துரத்தத் தொடங்கினர்.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேறு ஒருவர் அந்தப் பெண்ணை அணுகி நடந்தவற்றைக் கேட்டறிந்தார். அப்போது லாரி ஒன்று வருவதை அவர்கள் கண்டனர். லாரியை இடைமறித்தபோது அதன் ஓட்டுநருக்கு மலையாளம் புரியவில்லை. இந்தியில் மட்டுமே பேசத் தெரிந்தாலும் பெண்ணுக்கு ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டு லாரியில் ஏறச் சம்மதித்தார்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட இளையர்கள் மீது மானபங்கம் மற்றும் கொலைமுயற்சி வழக்குகள் போடப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்