கள்ளக் காதலால் பதவியைப் பறிகொடுத்த காவல்துறை அதிகாரி

2 mins read
314be6e0-53f9-4130-9880-857d1f6b4c78
சித்திரிப்பு: - பிக்சாபே

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கள்ளக் காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, பதவி உயர்வு பெறவிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருபா சங்கர் கன்னௌஜியா எனும் அதிகாரி துணைக் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெறவிருந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குமுன் அவர் பெண் காவலர் ஒருவருடன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவில் இருந்த விவகாரம் தொடர்பில் காவலராகப் (கான்ஸ்டபிள்) பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி லக்னோ சரகத்துக்கான காவல்துறைத் தலைமை ஆய்வாளர் (ஐஜிபி) பரிந்துரைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

2021ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி உன்னாவ் நகரில் ‘சர்க்கிள் ஆஃபிசர்’ பதவியில் இருந்த கன்னௌஜியா, குடும்பக் காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.

விடுப்பு எடுத்தவர் வீட்டுக்குச் செல்லவில்லை. பெண் காவலர் ஒருவருடன் கான்பூர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து அவர் தங்கியதாகக் கூறப்பட்டது.

தனது தனிப்பட்ட தொலைபேசி, அலுவலகத் தொலைபேசி இரண்டையும் அவர் அணைத்துவைத்துவிட்டதாகத் தெரிகிறது.

அவரைத் தொடர்புகொள்ள இயலாததால் கன்னௌஜியாவின் மனைவி உன்னாவ் காவல்துறைக் கண்காணிப்பாளரின் உதவியை நாடினார்.

கடைசியாகக் கான்பூர் ஹோட்டலில் கைத்தொலைபேசிக் கட்டமைப்பில் கன்னௌஜியாவின் கைப்பேசி தொடர்பில் இருந்ததைக் கண்டுபிடித்து அங்குச் சென்ற காவல்துறையினர், பெண் காவலரையும் கன்னௌஜியாவையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அவர்கள் அதற்கு ஆதாரமாகக் காணொளி ஒன்றைப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், கன்னௌஜியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி லக்னோ சரக ஐஜிபி பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்