அரசாங்க வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி கோடிக்கணக்கில் மோசடி

2 mins read
கைதானவர்களில் அரசு ஊழியர்கள், அரசியல் தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்டோர்
babe4f74-55ed-4cd8-8937-42f06bdb27df
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த். - படம்: இந்திய ஊடகம்

பனாஜி: அரசாங்க வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் வசூலித்த மோசடிச் சம்பவம், கோவாவைப் பெரிதும் உலுக்கியுள்ளது.

இதன் தொடர்பில் அரசு ஊழியர்கள், அரசியல் தொடர்பு இருப்பதாகத் தங்களைக் கூறிக்கொண்டோர் உட்பட பல நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்க வேலை வாங்கித் தருவதாக இவர்கள் நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றிக் கோடி கணக்கில் மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

வடகோவா மாவட்டத்தில் 12 சம்பவங்கள், தென்கோவா மாவட்டத்தில் எட்டு சம்பவங்கள் என கோவா காவல்துறையினர் இதுவரை 20 மோசடிச் சம்பவங்களைப் பதிவுசெய்துள்ளனர்.

அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததன் தொடர்பில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது பெயர் இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டதை அடுத்து அரசாங்க ஊழியர் ஒருவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய மோசடிச் சம்பவம் பதிவாகி வருகிறது. அதிகபட்சம் மூன்று முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) மூன்று வெவ்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்தது.

காவல்துறை அதிகாரிகள், மூத்த அரசாங்க அதிகாரிகள், ஆசிரியர்கள், வலுவான அரசியல் தொடர்பு உள்ளதாகத் தங்களைக் கூறிக்கொண்டவர்கள் ஆகியோர் கைதாகியுள்ளனர். குற்றம் புரிந்ததாகக் கூறப்படுவோர், பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை போன்ற வெவ்வேறு மாநிலத் துறைகளில் வேலை தருவதாகக் கூறியுள்ளதாக நம்பப்படுகிறது.

“அரசாங்க வேலைகள் விற்பனைக்கு அல்ல,” என்று முன்னதாக கூறிய கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், அரசாங்க வேலை கிடைக்க பணம் செலுத்தியிருந்தால் புகாரளிக்க முன்வருமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்