தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் புழுதிப் புயல், கனமழை: நால்வர் உயிரிழப்பு, விமானச் சேவைகள் பாதிப்பு

2 mins read
50228f3f-0111-4d2e-8cff-68940dc99270
டெல்லி விமான நிலையத்திலிருந்து விமானங்களின் புறப்படுவதில் சராசரியாக ஒரு மணி நேரம் தாமதமானதாகக் கூறப்பட்டது. - படம்: என்டிடிவி
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புழுதிப் புயல் வீசியதைத் தொடர்ந்து கனமழை பெய்ததில் ஏறக்குறைய 200 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று, பெருமழையால் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நகரில் வெப்பநிலை குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் சராசரியாக 46 நிமிட தாமதத்துக்குப் பின் புறப்பட்டன. விமானங்கள் தரையிறங்குவதும் சராசரியாக 54 நிமிடம் தாமதமானது.

இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சில அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. புனே, பெங்களூரு ஆகியவற்றிலிருந்து டெல்லி சென்ற உள்நாட்டு விமானச் சேவைகளும் ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டன.

கூடுமானவரை சேவை தடைபடாமலிருப்பதை உறுதிசெய்ய ஊழியர்கள் முனைந்துள்ளதாக டெல்லி விமான நிலையம் கூறியுள்ள வேளையில், விமான நிலையத்திற்குச் செல்லுமுன் அண்மைய தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு சில விமான நிறுவனங்கள் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளன.

டெல்லிக்குச் செல்லும், டெல்லியிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானச் சேவைகள் சில தாமதமாகியுள்ளதாக அந்நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. துவாரகா, கான்பூர், மின்டோ ரோடு, லஜ்பத் நகர், மோதி பாக் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் சில மரங்களின் கிளைகள் முறிந்ததாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

துவாரகாவில் வீட்டின்மேல் மரம் முறிந்து விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர்.

காற்று பலமாக வீசியதில் மின்கம்பங்களின்மேல் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏறக்குறைய 20 ரயில்களின் சேவையில் இடையூறு ஏற்பட்டது.

வானிலை சீராகும்வரை அதிகம் வெளியில் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் வெப்பநிலை 19.8 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது. நகர் முழுவதிலும் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

நகரில் சனிக்கிழமை வரை பலத்த காற்று, இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று முன்னுரைத்துள்ள வானிலை ஆய்வகம் மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் மழை பெய்யுமென்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்