ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் வீசிய ஆகப்பெரிய புழுதிப் புயலால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
பகல் நேரத்திலேயே திடீரெனச் சுற்றுப்புறத்தை இருள் சூழ்ந்ததால் என்ன செய்வதெனத் தெரியாமல், அம்மக்கள் அச்சத்துடன் அங்குமிங்கும் ஓடும் காட்சிகளுடன் கூடிய காணொளிகள் வெளியாகி உள்ளன.
இணையத்தில் பரவி வரும் அக்காணொளிகளில், ஒரு பிரம்மாண்டமான மஞ்சள் புழுதிச் சுவரைப் போன்ற ஓர் அமைப்பு வேகமாக முன்னேறி வருவதும் பிரமிக்க வைக்கும், கிட்டத்தட்ட ஒரு பேரழிவு போன்ற காட்சிகளை உருவாக்குவதும் பதிவாகி உள்ளது.
இதுபோன்ற காட்சிகளை ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருப்பதாகப் பலரும் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சிலர், மணற்குன்றுகளால் உருவான ‘டூன்’ உலகத்திலிருந்து நேராகக் கொண்டுவரப்பட்ட ஒரு காட்சியைப் போல, பிகானேர் நகரைப் புழுதிப்புயல் சூழ்ந்ததாகவும் குறிப்பிட்டனர்.
“புயலால் முக்கியச் சாலைகளைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. பிகானேர் நகரம் முழுவதும் அடர்த்தியான புகைமூட்டம் சூழ்ந்து, ஒரு விசித்திரமான மஞ்சள், பழுப்பு நிற ஒளியையும் ஏற்படுத்தியது.
“இதனால் வாகனம் ஓட்டுவது அபாயகரமானதாக மாறியதுடன், பல குடியிருப்பாளர்கள் பாதுகாப்புக்காக வீட்டிற்குள் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புழுதி கலந்த காற்று வலுப்பெற்றதால், பல பகுதிகளில் பீதி ஏற்பட்டது,” என்று என்டிடிவி ஊடகச் செய்தி விவரித்தது.
மோசமான வானிலை நிலவும் நேரங்களில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு பக்கம் புழுதிப்புயல் வீசியபோதிலும், சனிக்கிழமை ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. தோல்பூர் மாவட்டத்தின் பாரி பகுதியில் அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவானது.

