புதுடெல்லி: இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் (சிஏஜி) சமர்ப்பித்த அறிக்கையின்படி, சில ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் இயந்திரங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் ‘இகோலி’ (E.coli) நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘இகோலி’ நுண்ணுயிரிகளில் சில வகைகள் உணவு நச்சுத்தன்மை, வயிற்றுப்போக்கு, சிறுநீரகச் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
512 புறநகர் அல்லாத ரயில் நிலையங்களில் பயணிகள் சேவை தரநிலை குறித்து சிஏஜி ஆய்வு நடத்தியது.
நான்கு மண்டலங்களில் உள்ள எட்டு ரயில் நிலையங்களின் குடிநீர் இயந்திரங்களில் ‘இகோலி’ நுண்ணுயிரிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் இரண்டு நிலையங்கள் (கோயம்புத்தூர், பாலக்காடு ஜங்ஷன்), தென் மத்திய ரயில்வேயில் ஒரு நிலையம் (ஹைதராபாத்), மத்திய ரயில்வேயில் நான்கு நிலையங்கள் (சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல், பிவண்டி ரோடு, கல்யாண் மற்றும் லோனாவாலா), கிழக்கு ரயில்வேயில் ஒரு நிலையம் (மதுபூர்) என மொத்தம் எட்டு நிலையங்களின் குடிநீர் இயந்திரங்களில் ‘இகோலி’ நுண்ணுயிரிகள் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், 512 நிலையங்களில் 458 நிலையங்களில் குறைந்தபட்ச அவசிய வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை என்பதையும் அந்தத் தணிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாமலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாகவோ இருந்தன.
சிஏஜி தகவல்களின்படி, இந்திய ரயில்வேயின்கீழ் 5,908 புறநகர் அல்லாத நிலையங்கள் உள்ளன. மேலும் 2023-24ஆம் ஆண்டில் தினந்தோறும் 7,424க்கும் மேற்பட்ட புறநகர் அல்லாத பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 292.4 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.


