மும்பை: மும்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை கொட்டியுள்ளது. கடந்த 107 ஆண்டுகளில் காணாத வகையில் பெய்த கனத்த மழையால் 295 மில்லி மீட்டர் அளவுக்கு நீர் பெருகியுள்ளது. இதற்கு முன் 1918ஆம் ஆண்டு 279.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
முன்னுரைக்கப்பட்டதைவிட 16 நாள்களுக்கு முன்பாகவே திங்கட்கிழமை (மே 26) மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 2001ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்த முறை பருவமழை முன்கூட்டியே பெய்தது.
மே 2021ஆம் ஆண்டு வீசிய டுக்டே புயலில் பதிவான 257.8 மில்லி மீட்டர் மழையின் அளவை இந்த முறை பெய்த மழை மிஞ்சிவிட்டது.
மும்பையின் பல பகுதிகளில் இடி, பலத்த காற்று ஆகியவற்றுடன் கடும் புயல் வீசியது. இந்திய வானிலை ஆய்வகம் நகரின் பல பகுதிகளில் அந்த நிலை தொடரும் என்று எச்சரித்துள்ளது.
பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்றபோதும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வாரம் முழுவதும் மும்பையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்தது. மும்பையில் உள்ள போரிவிலி, சாண்டகுரூஸ், போவெய் ஆகிய எட்டுப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கடும் மழை காரணமாக மத்திய, மேற்கு ரயில் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. “ரயில் சேவைகள் வேகத்தைக் குறைத்துக்கொண்டதால் எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படும்,” என்று மத்திய ரயில்வே துறை பேச்சாளர் கூறினார்.
35 ஆண்டுகளில் முதன்முறையாக தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே மகாராஷ்டிராவை வந்தடைந்ததாக வானிலை அலுவலகம் குறிப்பிட்டது. அடுத்த மூன்று நாள்களுக்கு அது மும்பையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பருவமழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் மழையால் வெப்பநிலை குறைந்ததை விவசாயிகள் வரவேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கேரள மாநிலத்திலும் வழக்கத்தைவிட முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பொழிந்தது.
வழக்கமாக ஜூன் முதலாம் தேதி வாக்கில் கேரளாவைச் சென்றடையும் தென்மேற்கு பருவமழை ஜூன் 7ஆம் தேதி மகாராஷ்டிராவையும் ஜூன் 11ஆம் தேதி மும்பையையும் சென்றடையும்.