அசாமில் நிலநடுக்கம்; அண்டை மாநிலங்களில் நில அதிர்வு

1 mins read
d09b6bd1-d6ef-423f-a869-76ca61232cc4
உள்ளூர் நேரப்படி மாலை 4.41 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. - மாதிரிப்படம்

கௌகாத்தி: இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அம்மாநிலத்தின் பல பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்பட்டது.

உள்ளூர் நேரப்படி மாலை 4.41 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது சோனித்பூர் மாவட்டம், தேக்கியாஜுலியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் விளைந்ததாக இதுவரையிலும் தகவல் இல்லை என்று அதிகாரிகள் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு 5.8 ரிக்டர் என்றும் அதனால் வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகள் குலுங்கின என்றும் அச்செய்தி குறிப்பிட்டது.

இதுகுறித்து எக்ஸ் ஊடகத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், “அசாமில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க வேண்டிக்கொள்கிறேன். எல்லாரும் விழிப்புடன் இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தில் அவ்வப்போது இத்தகைய நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு. கடந்த 2021ஆம் ஆண்டு அங்கு சோனித்பூர் மாவட்டத்தை 6.4 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியதில் பல நகரங்களிலும் கட்டடங்கள் சேதமடைந்தன.

குறிப்புச் சொற்கள்