புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சு இபோலா தொற்றுநோய் தொடர்பாகப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை இபோலா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரச் செயலர் புண்ய சலில ஸ்ரீவஸ்தவா, இபோலா நோய்த்தொற்று சமாளிப்பு குறித்து புதன்கிழமை (மே 20) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலர்களுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
அதன் பிறகு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல் அறிக்கையில், இபோலா தொற்று அதிகம் காணப்படும் நாடுகளில் இருந்து இந்தியாவின் துறைமுகம், விமான நிலையம் போன்ற எல்லாவிதமான நுழைவாயில்கள் வழியாகவும் வருவோருக்கான மருத்துவ ஆலோசனை இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக, இபோலா தொற்று அபாயம் அதிகமுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள காங்கோ குடியரசு, உகாண்டா, தென்சூடான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அல்லது பயண மாறுதல் செய்துகொள்ளும் அந்நாடுகளின் பயணிகளிடம் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நாடுகளோடு இதர நாடுகளிலிருந்து வருவோரும் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி, பேதி, தொண்டை வறட்சி, காரணமற்ற ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் வருவோரும் அதுபற்றி விமான நிலையங்களில் உள்ள சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிநுழைவுச் சோதனை முகப்புகளில் அமர்த்தப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளரிடம் பயணிகள் தங்களது உடல்நலிவு குறித்த விவரங்களைத் தெரிவித்து பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோவிலும் உகாண்டாவிலும் இபோலா மரணங்கள் பதிவாகியுள்ளன.

