இபோலா தொற்று: டெல்லியில் நடைபெற இருந்த ஆப்பிரிக்க நிகழ்ச்சிகள் ரத்து

இபோலா தொற்று: டெல்லியில் நடைபெற இருந்த ஆப்பிரிக்க நிகழ்ச்சிகள் ரத்து

2 mins read
af0e78ce-be26-4d5d-9629-496cc88e8cbd
இபோலா தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருவோர் இந்தியாவின் அனைத்துவிதமான நுழைவாயில்களிலும் கண்காணிக்கப்படுகின்றனர். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: இபோலா தொற்று காரணமாக இந்திய-ஆப்பிரிக்க நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற இருந்த இந்திய-ஆப்பிரிக்க கருத்துமன்ற உச்சநிலைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் சுகாதார நிலவரம் காரணமாக நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் எப்போது அந்தக் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து இருதரப்பும் ஆலோசித்து முடிவெடுக்க இருப்பதாகவும் அமைச்சு வியாழக்கிழமை (மே 21) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உருவாகிவரும் பொது சுகாதாரச் சூழலைக் கருத்தில்கொண்டு, உச்சிமாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து இந்திய அரசு, ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர், ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையம் ஆகியவற்றைக் கலந்து ஆலோசித்த பின்னரே ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இபோலா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சு இபோலா தொற்றுநோய் தொடர்பாகப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது.

மத்திய சுகாதாரச் செயலர் புண்ய சலிலா ஸ்ரீவாஸ்தவா, இபோலா நோய்த்தொற்று சமாளிப்பு குறித்து புதன்கிழமை (மே 20) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலர்களுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அதன் பிறகு வெளியிடப்பட்ட சுகாதார அறிவுறுத்தல் அறிக்கையில், இபோலா தொற்று அதிகம் காணப்படும் நாடுகளில் இருந்து இந்தியாவின் துறைமுகம், விமான நிலையம் போன்ற எல்லாவிதமான நுழைவாயில்கள் வழியாகவும் வருவோருக்கான மருத்துவ ஆலோசனை இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, இபோலா தொற்று அபாயம் அதிகமுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள காங்கோ குடியரசு, உகாண்டா, தென்சூடான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அல்லது பயண மாறுதல் செய்துகொள்ளும் அந்நாடுகளின் பயணிகளிடம் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நாடுகளோடு இதர நாடுகளிலிருந்து வருவோரும் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி, பேதி, தொண்டை வறட்சி, காரணமற்ற ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் வருவோரும் அதுபற்றி விமான நிலையங்களில் உள்ள சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிநுழைவுச் சோதனை முகப்புகளில் அமர்த்தப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளரிடம் பயணிகள் தங்களது உடல்நலிவு குறித்த விவரங்களைத் தெரிவித்து பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோவிலும் உகாண்டாவிலும் இபோலா மரணங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்