இந்திய மாநிலங்களில் இபோலா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய மாநிலங்களில் இபோலா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

2 mins read
f99b00c1-cb9f-4e0a-97ef-8813fb67ba01
சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் சோதனை செய்யும் சுகாதார அதிகாரிகள். - படம்: சூப்பர் சென்னை/எக்ஸ்

புதுடெல்லி: ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டாவில் தற்போது நிலவிவரும் இபோலா நோய்ப் பரவலை அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார அவசரநிலையாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்தியாவில் மருத்துவமனைகளை தயார்நிலையில் வைத்திருக்குமாறும் விரைவு மீட்பு அமைப்புகளை வலுப்படுத்துமாறும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.

தெற்கு சூடான் உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகளில் நோய்ப் பரவல் அபாயம் அதிகமாக உள்ளது என்றும், இருப்பினும் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கப் பகுதிக்கு வெளியே உள்ள நாடுகளுக்குத் தற்போது அபாயம் குறைவாகவே உள்ளது என்றும் மத்தியச் சுகாதாரச் செயலர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா கூறினார்.

இருப்பினும், அதிகரித்துவரும் அனைத்துலக வர்த்தகம், பயணம் காரணமாகச் சுகாதார அமைப்பின் அனைத்து நிலைகளிலும் போதுமான தயார்நிலை, கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துமாறு செயலர் எச்சரித்தார்.

ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ், இபோலா நோய்க்கான அறிகுறிகளைக் கண்காணிப்பபைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, அண்மையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்தவர்களிடையே இந்தக் கண்காணிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல், பலவீனம், தசை வலி, தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோல் தடிப்பு மற்றும் சிவந்த கண்கள் போன்ற அறிகுறிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் எனப் பட்டியலிட்டுள்ளது.

மேலும், சந்தேகிக்கப்படும் இபோலா நோயாளிகளுக்கான நோய்க் கண்காணிப்பு, மாதிரி சேகரிப்பு, பரிந்துரை வழிமுறைகளை உள்ளடக்கிய ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

தொற்றுத் தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் கூடிய, பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களையும் சிறப்பு அவசர உதவி வாகனங்களைத் தயார்ப்படுத்துமாறும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள், தனிமனிதப் பாதுகாப்புக் கருவிகள், தளவாட ஆதரவு, ஆய்வக வசதிகள், தீவிரச் சிகிச்சைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இபோலா தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து பெறப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு, புனேவில் அமைந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய நச்சுயிரியல் நிறுவனம் முழுமையாகத் தயார்நிலையில் இருப்பதாகச் சுகாதாரச் செயலாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
இபோலாவிமானப் போக்குவரத்துநோய்