இந்தியாவுடன் இணைந்து பங்காற்ற விரும்பும் நாடுகளுடன் பொருளியல் ஒத்துழைப்பு: அ‌ஷ்வினி வைஷ்ணவ் வைஷ்ணவ்

2 mins read
92489e3f-304b-412b-94cc-041c827b48bf
டாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலகப் பொருளியல் அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இந்தியத் தகவல், ஒலிபரப்பு, மின்னணு, தகவல்தொழில்நுட்ப அமைச்சர் (வலது), மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர கங்காதர பட்னவீஸ். - படம்: எக்ஸ்/@Dev_Fadnavis

டாவோஸ்: இந்தியாவுடன் இணைந்து பங்காற்ற விரும்பும் நாடுகளுடன் பொருளியல் ஒத்துழைப்பை மேற்கொள்ளத் தயார் என இந்தியத் தகவல், ஒலிபரப்பு, மின்னணு, தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அ‌ஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலகப் பொருளியல் அமைப்பின் ஆண்டு கூட்டத்துக்குப் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை அஸ்வினி வைஷ்ணவ் வழிநடத்திச் சென்றுள்ளார்.

அங்கு நடந்த நேர்காணல் ஒன்றில் இக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தியப் பொருளியல் உலகளாவிய பங்கேற்புக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்மூலம் எந்த அளவுக்குச் சிறந்த மாற்றங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது என்பதை டாவோஸ் மாநாட்டில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம். உலக நாடுகளின் புதிய சிந்தனைகள், யோசனைகளையும் ஏற்க இந்தியா தயாராக உள்ளது,” என அமைச்சர் கூறினார்.

பகுதி மின்கடத்தி உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும் இந்தியாவுடன் இணைந்து பங்காற்ற விரும்பும் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ள அந்நாடு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வளா்ந்த நாடுகளும் பொருளியல் சரிவைச் சந்தித்து வரும் சூழலில், பொருளியல் மீள்தன்மையுடனும் குறைந்த கடன்சுமை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கி வருவதாக அவர் சுட்டினார்.

வளா்ந்த நாடுகளின் கடன் சுமை மலைபோல குவிந்துள்ளபோது, இந்தியா போன்ற நாடுகளில் அதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுப்பது முக்கியம் எனத் தெரிவித்தார் அவர்.

அதற்கேற்ப, இந்தியா தனது டாலர் கடனைக் குறைந்த அளவில் பராமரித்து, நாட்டின் கடன் தொகுப்பை பெரும்பாலும் ரூபாயிலேயே பராமரித்து வருவதாக அவர் கூறினார்.

இவ்வாறு, அமெரிக்க டாலர் அல்லது அந்நியச் செலாவணி கடனைக் குறைந்த அளவில் பராமரிக்கும்போது, இந்தியப் பொருளியலின் மீள்தன்மை மேம்படும் என்றார் அமைச்சர் அ‌ஷ்வினி வைஷ்ணவ்.

குறிப்புச் சொற்கள்