புதுடெல்லி: தென்கொரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பொருளியல் ஒத்துழைப்பு இன்னும் குறைந்த அளவிலேயே உள்ளதாகத் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் தெரிவித்துள்ளார்.
இந்த ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் பொருளியல் ஒத்துழைப்பில் இருதரப்புக்கும் இடையே உள்ள உறவு இப்போது இருப்பதைவிட முற்றிலும் மாறுபட்டதாக மாற்றப்படும் என்றும் அரசுமுறைப் பயணமாக புதுடெல்லி சென்றுள்ள அவர், அங்குக் கொரியச் சமூக உறுப்பினர்களுடனான இரவு விருந்துக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.
ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரிய அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
இந்தியா, தென்கொரியா இடையேயான வர்த்தக மதிப்பு கடந்த ஆண்டு 25.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்த இருதரப்பு வர்த்தகத்தை எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் (50 பில்லியன்) நோக்கில், இரு நாடுகளும் தங்களின் விரிவான பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தை மேம்படுத்த முயன்று வருவதாக அதிபரின் ஆலோசகர் வி சுங்-லாக் தெரிவித்ததாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தது.
புதுடெல்லியில் இந்தியப் பெருநிறுவனத் தலைவர்களுடன் வணிக நிகழ்ச்சிகளில் தென்கொரிய அதிபர் பங்கேற்பார் என்றும் நிதி, செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது என்றும் திரு வி மேலும் கூறியுள்ளார்.
உலகளாவிய பொருளியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில், ஈரான் போருடன் தொடர்புள்ள விநியோகச் சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் லீ தெரிவித்தார். இத்தகைய சூழல் இந்தியாவையும் தென்கொரியாவையும் மிக முக்கியமான உத்திபூர்வ பங்காளிகளாக மாற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இரு தலைவர்களும் கப்பல் கட்டுமானம், வர்த்தகம், முதலீடு, செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி, வளர்ந்து வரும் பிற தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது பயணத்தின்போது, இந்திய அதிபர் திரௌபதி முர்முவையும் சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து தென்கொரிய அதிபர் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தென்கொரிய அதிபரைச் சந்தித்து, பல்வேறு துறைகளில் உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து அவர் காட்டிய அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு, அதிபர் லீ அடுத்து வியட்னாமிற்குச் செல்லவிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

