சண்டிகர்: சட்டவிரோதமாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான சுரேந்தர் பன்வாரை அமலாக்கத் துறை கைதுசெய்துள்ளது.
சோனிபட் தொகுதி எம்எல்ஏவான பன்வாரின் வீடுகளிலும் அலுவலகத்திலும் இவ்வாண்டு ஜனவரி மாதம் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தில்பாக் சிங்கிற்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளின்போது ரூ.5 கோடி ரொக்கம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கிக்குண்டுகள் சிக்கின.
தில்பாக் சிங்கிற்கும் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பன்வார் 32,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கவிதா ஜெயினைத் தோற்கடித்தார். அதே நேரத்தில், தில்பாக் சிங் ஏறக்குறைய 1,400 வாக்குகளில் பாஜகவின் கன்ஷியாம் தாசிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

