தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வெளிநாடுவாழ் இந்தியர்கள் பெயரில் போலிச் சான்றிதழ்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பேரளவில் மாணவர் சேர்க்கை மோசடி

2 mins read
658a4d55-1fce-4af4-94ea-406d9cfa5227
என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் 18,000 இடங்களில் உள்ளூர் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அமலாக்கத் துறை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான இடஒதுக்கீடு மூலம் மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) பெயரில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் 18,000 இடங்களில் உள்ளூர் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அமலாக்கத் துறை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சும் வெளிநாடுகளில் உள்ள அதன் தூதரகங்களும் விசாரணைக்கு உதவின.

மாணவர் சேர்க்கைக்காகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்ட என்ஆர்ஐ சான்றிதழ்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. அவை போலியானவை என்பதை வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்கள் உறுதிசெய்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அங்குக் கைப்பற்றப்பட்ட என்ஆர்ஐ சான்றிதழ்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க அவை வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கும் மற்ற அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றுள் பெரும்பாலானவை போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முகவர்களுக்குப் பணம் கொடுத்து, அக்கல்லூரிகள் போலி என்ஆர்ஐ சான்றிதழ்களைத் தயாரித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அந்த முகவர்கள் போலியான என்ஆர்ஐ குடும்பங்களை உருவாக்கி, மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அக்குடும்பத்தினரின் உறவினர்கள் எனக் குறிப்பிட்டு, என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் அவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர உதவியதாகச் சொல்லப்படுகிறது.

வேறு சில சம்பவங்களில், ஒரே என்ஆர்ஐ சான்றிதழைப் பயன்படுத்தி, பல மாணவர்கள் சேர்க்கப்பட்டதும் அந்த மாணவர்கள், தங்களுக்கான என்ஆர்ஐ ஆதரவாளர்களை முன்பின் அறிந்திராதவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடியின் பின்னணியில் அந்த மருத்துவக் கல்லூரியின் விளம்பரதாரர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அந்த விளம்பரதாரர்களின் முகவர்கள் நாடு முழுக்கவும் உள்ளனர் என்றும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் உள்ளூர் மாணவர்களைச் சேர்த்துவிட்டதன் மூலம் அவர்கள் பெரும்பணம் ஈட்டினர் என்றும் சொல்லப்படுகிறது.

இம்மோசடிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் சிலர் உதவியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணம் பெற்றுக்கொண்டு தங்கள் பெயரைப் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் அனுமதித்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி விளம்பரதாரர்களின் முகவர்கள் அந்த வெளிநாடுவாழ் இந்தியர்களை அணுகி, பணம் கொடுத்து அவர்களின் விவரங்களைப் பெற்றதை அமலாக்கத்துறை கண்டறிந்தது.

இப்போதைய விதிகளின்படி, என்ஆர்ஐ மாணவர் ஒருவருக்கான கல்விக் கட்டணத்தை அவரது என்ஆர்ஐ ஆதரவாளரே செலுத்த வேண்டும். ஆனால், பல்வேறு சம்பவங்களில் மாணவர்களின் குடும்பத்தினரே கல்விக் கட்டணம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்