புதுடெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சந்தித்ததை அடுத்து, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று புதன்கிழமை (மார்ச் 26) காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“மக்கள் பிரச்சினை, நிதி ஒதுக்கீடுக்காக மட்டுமே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தோம்.
“அதிமுகவைப்பொறுத்தவரை தி.மு.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக அதிமுக எல்லா முயற்சிகளும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்றார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேள்விக்கு, “தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை,” என்றார். “கூட்டணி வேறு; கொள்கை வேறு. கூட்டணி என்பது சந்தர்ப்பச் சூழலுக்கு ஏற்ப மாறும். தேர்தலில் போது என்ன சூழ்நிலை உள்ளதோ அதற்கு ஏற்றவகையில் கூட்டணி அமையும்,” என்றார் அவர். இந்தச் சந்திப்புக் குறித்த செய்தியாளர் கேள்விக்கு “எல்லாம் நன்மைக்கே” என ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவும் பாஜகவும் 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலை கூட்டணி அமைத்து சந்தித்தன. 2023ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக திடீரென விலகியது. அதன்பிறகு பாஜகவை நேரடியாக விமர்சனம் செய்த எடப்பாடி பழனிசாமி, 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கவில்லை.
அப்போது, அதிமுக, பாஜக தனித்தனியாக அணிகள் அமைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இரு அணிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. ஆகவே, இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என இரண்டு தரப்பிலும் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்றார். அங்கு அண்மையில் திறப்பு விழா கண்ட அதிமுக அலுவகத்தை பார்வையிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் இரவு அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்தார். அதிமுகவின் முக்கிய தலைவர்களும் அப்போது உடன் இருந்துள்ளனர். பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். இதனையடுத்து பாஜகவுடனான அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.