அகமதாபாத்: குஜராத்தின் சோமநாதர் கோயில் வரலாறை மறைக்க நடந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, கோயில் இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கிர் சோம்நாத் மாவட்டத்தில் நடைபெற்ற ‘சோமநாதர் சுயமரியாதைப் பெருவிழாவில்’ கலந்துகொண்டு அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள்:
வரலாறும் வெற்றியும்: “1026-ல் கஜினி முகமது நடத்திய தாக்குதலுக்குப் பிறகும், 1000 ஆண்டுகளைக் கடந்து சோமநாதர் கோயில் நிற்கிறது. இது அழிவு மற்றும் தோல்வியின் வரலாறு அல்ல; வெற்றி மற்றும் மறுமலர்ச்சியின் வரலாறு.”
மறைக்கப்பட்ட வரலாறு: “தீவிரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் இக்கோயிலை மீண்டும் கட்ட உறுதியேற்றார். அதைத் தடுக்க முயன்ற சக்திகள் இன்றும் உள்ளன. அவற்றை எதிர்கொள்ள நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.”
படையெடுப்பாளர்கள்: “இந்தியா மீது படையெடுத்தவர்கள் வரலாற்றின் பக்கங்களாகச் சுருங்கிவிட்டனர். ஆனால், சோமநாதரின் கொடி இன்றும் பறக்கிறது.”
பிரம்மாண்ட ட்ரோன் காட்சி: விழாவை முன்னிட்டு 3,000 ட்ரோன்கள் மூலம் விண்ணில் சிவபெருமான், சர்தார் படேல், பிரதமர் மோடி மற்றும் கோயிலைக் காக்க உயிர்த் தியாகம் செய்த வீர் ஹமிர்ஜி கோகில் ஆகியோரின் உருவங்கள் பிரம்மாண்டமாகச் சித்திரிக்கப்பட்டன. முன்னதாக, வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உற்சாகமாக மேளம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

