தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியத் தாதியைக் காப்பாற்ற பெருமுயற்சி

2 mins read
9716c835-d9c7-496f-8547-1c3edcfd7437
தாதி நிமிஷா பிரியாவிற்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஏமன் நாட்டில் அந்நாட்டவர் ஒருவரைக் கொன்றுவிட்டதாகக் கூறி, இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா என்ற தாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்விவகாரத்தில் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் நிமிஷாவிற்கு வழங்கி வருவதாகச் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 31) இந்தியா தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ஏமனில் நிமிஷா பிரியாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து அறிந்துள்ளோம். அதன் தொடர்பில் அவரது குடும்பம் உரிய தெரிவுகளை ஆராய்ந்து வருகிறது. இவ்விவகாரத்தில் இந்திய அரசு தன்னாலான எல்லா உதவிகளையும் வழங்கி வருகிறது,” என்று கூறியுள்ளார்.

நிமிஷாவின் மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமியும் அண்மையில் ஒப்புதல் அளித்துவிட்டார்.

இன்னும் ஒரு மாதத்தில் நிமிஷாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் எனக் கூறப்படுவதால், அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள அவருடைய குடும்பத்தினர், எப்படியேனும் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிமிஷாவின் தாயார் பிரேம குமாரி, 57, மரண தண்டனையிலிருந்து தன் மகளை மீட்க அயராது போராடி வருகிறார். அதற்காக இவ்வாண்டுத் தொடக்கத்தில் ஏமன் தலைநகர் சனாவிற்கும் அவர் சென்றிருந்தார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அவர் அங்குச் சென்றதாகக் கூறப்பட்டது.

பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த நிமிஷா கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் சென்றார். அங்கு பல மருத்துவமனைகளில் அவர் பணியாற்றினார்.

அதன்பின் அங்கு சொந்தமாக ஒரு மருந்தகத்தைத் திறக்க அவர் முடிவுசெய்தார்.

இதனிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு அவருக்கும் ஏமனைச் சேர்ந்த அவரது தொழிற்பங்காளி தலால் அப்தோ மஹ்தி என்பவருக்கும் இடையே, பணம் தொடர்பில் பிரச்சினை வெடித்தது.

அப்போது, தலால் அவரது கடப்பிதழைப் பறித்துவைத்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது, அதனை மீட்கும் நோக்கில், நிமிஷா ஊசிமூலம் அவருக்கு மயக்க மருந்தைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மருந்தளவு அதிகமானதால் தலால் இறந்துவிட்டார்.

அதன்பின் ஏமனிலிருந்து தப்பிக்க முயன்றபோது நிமிஷா கைதுசெய்யப்பட்டார். 2018ல் அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட, 2020ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்