பேருந்து கால்வாயில் கவிழ்ந்து எட்டு பக்தர்கள் உயிரிழப்பு

பேருந்து கால்வாயில் கவிழ்ந்து எட்டு பக்தர்கள் உயிரிழப்பு

1 of 2
படம்: இந்தியா டுடே
படம்: மாத்ருபூமி

17 Oct 2026 - 5:53 pm

1 mins read

கோட்டா (ராஜஸ்தான்): இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காத்து ஷ்யாம் கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, சனிக்கிழமை (அக்டோபர் 17) அதிகாலை டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

கோட்டா மாவட்டம் வழியாகச் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து சாலையை விட்டு விலகி ஓடி, 15 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்தது. அதிகாலை 6 மணியளவில் இவ்விபத்து நேர்ந்தது.

பேருந்தில் இருந்த 25 பயணிகளில் முதியவர்களும் சிறுவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவலறிந்ததும் உள்ளூர்வாசிகளின் துணையுடன் காவல்துறையினர் உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கினர். கால்வாயில் தேங்கியிருந்த சேறும் சகதியும் மீட்பு நடவடிக்கைக்கு மிகுந்த சவாலாக அமைந்தது. பின்னர் ராட்சத இயந்திரங்கள்மூலம் பேருந்து மீட்கப்பட்டது.

காயமடைந்த 17 பேர் அருகிலிருந்த இரு மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆயினும், அவர்களில் எட்டுப் பேர் உயிரிழந்துவிட்டதாகக் கோட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பலரது உயிரைப் பறித்த விபத்து தொடர்பில் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார். மாண்டோரின் குடும்பத்தார்க்கும் அவர் இரங்கல் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் தேவையான உதவிகளையும் உடனடியாக வழங்கிட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்