புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இருந்து தமிழக எம்பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட எட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இண்டியா கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நடப்புக் கூட்டத்தொடரில் அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் திங்கட்கிழமை நடைபெற்றது.
அப்போது, இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி எம்.எம். நரவனே எழுதியுள்ள புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைக் குறிப்பிட்டுப் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்ப, பதிலுக்கு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டதுடன், காகிதங்களைக் கிழித்து வீசியதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, விழுப்புரம் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட எட்டுப் பேரை அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்க வேண்டுமென பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதனால் ஆவேசம் அடைந்த எதிர்க்கட்சியினர், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் பிரதமர் மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும் என்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பிரதமர் சமரசம் செய்துகொண்டுள்ளார் என்றும் விமர்சித்தார்.
வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் நாட்டு மக்களின் உழைப்பை திரு மோடி விற்றுவிட்டார் என்றும் தனக்கான பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அதை உடைப்பதால் அவர் அச்சத்தில் உள்ளார் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.


