அலகாபாத்: குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது பயங்கரவாதிகள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ஒரே நேரத்தில் குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் சார்பாக, பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதிலும், குஜராத் மாநிலத்தில் செயல்திறன்மிக்க ஒரு கட்டமைப்பை நிறுவுவதிலும் கைது செய்யப்பட்ட எட்டுப் பேரும் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாக பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் தெரிவித்தனர்.
ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் கொள்கைகளை குஜராத்தியில் மொழிபெயர்க்கவும் அவற்றைப் பரப்பவும் எட்டுப் பேரும் திட்டமிட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்டோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள், ஆவணங்கள் மூலமாகப் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஒரு பயங்கரவாத இயக்கத்துடனான நிதித்தொடர்புகள் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கைது செய்யப்பட்ட எட்டுப் பேரும் 14 நாள்களுக்குக் காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் பயங்கரவாதச் செயல்பாடுகளை ஒடுக்குவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் உள்நாட்டு அமைப்புகள் முடக்கப்படுவதுடன், பயங்கரவாதத் தொடர்புள்ளவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

