ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தங்கனபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் பிரணய் குமார்.
அவர் யூடியூபில் காட்டு விலங்குகளை எப்படி சமைப்பது என்பது குறித்த காணொளிகளை அடிக்கடி பதிவேற்றம் செய்துவந்தார்.
அண்மையில் பிரணய் காட்டுப் பன்றி மாமிசம் சமைப்பது எப்படி? எனும் காணொளியை தமது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு வனவிலங்கு ஆர்வலர்களிடையே பலத்த எதிர்ப்பு எழும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் சில காணொளிகளை நீக்கினார்.
இந்நிலையில், இந்தியாவின் தேசிய பறவையான மயிலை பிரணய் சட்டத்துக்கு புறம்பாக வேட்டையாடி, கொன்று, அதை சமைப்பது எப்படி எனும் காணொளியை கடந்த 3ஆம் தேதி பதிவிட்டார்.
அது பல வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிரணய் மீது வனசட்டங்களின்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரிடமும் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரணய்யை கைது செய்தனர்.
கைது நடவடிக்கையின் போது பிரணய் வீட்டில் மீதமிருந்த மயில் கறியை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆடவரின் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாக அவர்கள் கூறினர்.