தெலுங்கானா: 80 வயது முதியவர் தனக்குத்தானே கல்லறை கட்டி வைத்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) காலமான அவரின் உடல் ஆசையாகக் கட்டிய கல்லறையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நக்கா இந்திரய்யா (80). தனது மறைவுக்குப் பிறகு, தனது பிள்ளைகளுக்கு எந்தவிதச் சுமையையும் ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்காக ரூ.12 லட்சம் செலவில் இறுதி ஓய்விடத்தைக் கட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது மனைவியின் கல்லறைக்கு அருகிலேயே இந்திரய்யா தனது சொந்தக் கல்லறையையும் கட்டியிருந்தார். அந்த இடத்தில் வாழ்க்கை, மரணத்தின் உண்மைகள் குறித்த செய்தியுடன் கூடிய கல்வெட்டு ஒன்றையும் நிறுவியிருந்தார்.
அவர் உயிருடன் இருந்த காலத்தில், அடிக்கடி அந்த இடத்திற்குச் சென்று, சுற்றியுள்ள இடத்தைச் சுத்தம் செய்வதையும் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதையும் அங்கு அமைதியாக அமர்ந்து தியானிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கை ஈகை குணம் நிறைந்ததாகவே இருந்தது.
இதுகுறித்து இந்திரய்யாவின் மூத்த சகோதரர் நக்கா பூமய்யா கூறுகையில், “அவர் தனக்கென்று சொந்தக் கல்லறையைக் கட்டியதோடு மட்டுமல்லாமல், கிராமத்தில் ஒரு தேவாலயத்தையும் கட்டிக் கொடுத்துள்ளார்.
“கிராமத்திற்காகப் பல நல்ல காரியங்களைச் செய்துள்ளார். தனது சொத்துகளைத் தனது நான்கு பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தார். அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்ததுடன், குடும்பத்தில் ஒன்பது திருமணங்களையும் முன்னின்று நடத்தி வைத்தார்,” என்று தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை இந்திரய்யா காலமானதைத் தொடர்ந்து, அவருக்கெனச் சொந்தமாகக் கட்டிய கல்லறையிலேயே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் அவரது இறுதி ஆசை நிறைவேற்றப்பட்டது. இறுதிச் சடங்குகளில் கிராம மக்கள் பலர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
சொந்தக் கல்லறையைக் கட்டியபோது அது பலருக்குத் துக்கத்தை ஏற்படுத்தினாலும் தான் அதை மகிழ்ச்சியோடு உணர்வதாக இந்திரய்யா முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

