சாகசம் புரிவதற்காக இளையர்கள் கயிற்றில் மிதிவண்டி ஓட்டுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்களுக்கு எல்லாம் சவால்விடும் வகையில் இருக்கிறது 67 வயது மூதாட்டியின் சாகசம்.
இன்ஸ்டகிராம் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளியில், சேலை அணிந்திருக்கும் அம்மூதாட்டி, உலகில் இதுதான் எளிதான வேலை என்பதுபோல, எந்த அச்சமுமின்றி கயிற்றில் மிதிவண்டி ஓட்டுவதைக் காட்டுகிறது.
"எனக்கு அச்சமில்லை மகனே, நான் மிதிவண்டி ஓட்டுவேன். என்னோடு வந்தால் போதும். 67 வயதில் தமது ஆசையை நிறைவேற்ற இந்த அம்மையார் எங்களிடம் வந்தார். நாங்களும் நிறைவேற்றினோம்," என்று அந்த இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்று, முதியவர்கள் சாகசத்தில் ஈடுபடும் காணொளி வெளியாகியிருப்பது இது முதன்முறையன்று. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான முதியவர் ஒருவரின் மோட்டார்சைக்கிள் பயணம் குறித்த காணொளி இணையவாசிகள் பலரது கவனத்தை ஈர்த்தது.
அதில், அந்த முதியவர் கைப்பிடியைத் தொடாமலேயே மோட்டார்சைக்கிள் ஓட்டியதைக் காண முடிந்தது. ஓடும் மோட்டார்சைக்கிளில் நின்றபடியும் நடனமாடுவதுபோல அங்குமிங்குமாக தமது நிலையை மாற்றியும் அவர் சாகசம் புரிந்ததை அக்காணொளி காட்டியது.

