கோல்கத்தா: தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
அரசியல் பிரசாரத்துக்காக அரசு இயந்திரத்தை இந்தியப் பிரதமர் தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) முதற்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஹூப்ளி பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தொடர்பாகப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியதன் மூலம் பாஜகவுக்காக அவர் சட்டவிரோதமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது என்றார். இதுகுறித்துத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா 2023ஆம் ஆண்டு, செப்டம்பரிலேயே நிறைவேற்றப்பட்டும்கூட மத்திய அரசு அதை இன்னும் அமல்படுத்தவில்லை என்று குறிப்பிட்ட முதல்வர் மம்தா, ஒரே மசோதா எத்தனை முறை நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாஜக அரசு விரும்புகிறது? எனக் கேள்வி எழுப்பினார்.
பாஜகவின் சரிவு தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளிலும் தாமே வேட்பாளர் எனப் பிரசாரம் மேற்கொள்வதைப் பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நீங்கள் (பிரதமர் மோடி) வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர். எனவே, பிரதமர் பதவியில் இருந்து விலகி, மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கலாம்,” என்றார் முதல்வர் மம்தா பானர்ஜி.

