புதுடெல்லி: தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் மட்டும் 58 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள். அசாமை விட்டுவிட்டு தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடத்தப்பட்டது ஏன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா கேள்வியெழுப்பியுள்ளார்.
இதில் நிறைய முரண்பாடுகளும் தவறான பதிவுகளும் உள்ளன. அதுபற்றி தேர்தல் ஆணையரிடம் விளக்கம் கேட்டதற்கு, அவர் ஆணவத்துடன் பேசுவதோடு, பொய்யாக அடுக்குகிறார். இவ்வளவு பொய் பேசும் ஒரு தேர்தல் ஆணையரை இதுவரை நான் பார்த்ததேயில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். அவருடன் 15 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகளும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்களும் சென்றனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மம்தா பானர்ஜி. அப்போது, “எனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் “இவ்வளவு ஆணவமாகவும் இவ்வளவு பொய் பேசுபவராகவும் இருக்கும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை இதுவரை நான் பார்த்ததே இல்லை.
“கிட்டத்தட்ட 2 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இருக்கும் வாக்குரிமையை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
“வாக்காளர் பட்டியலில் விடுபட்டுப் போன லட்சக்கணக்கான மக்களை என்னால் டெல்லிக்கு அழைத்து வர முடியும். யார் முன்னிலையிலும் அவர்களை அணிவகுத்து நிற்க வைக்க முடியும் என்று மம்தா சூளுரைத்துள்ளார்.
மேலும் அவர், “தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், தேர்தல் நடைபெறும் மாநிலங்களைத் தவிர்த்துவிட்டு முறையான திட்டமிடலுடன் செய்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்யவில்லை. அசாமில் தீவிர திருத்தப் பணிகளை நீங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனால், மேற்கு வங்கத்திலும் தமிழ்நாட்டிலும் செய்திருக்கிறீர்கள்.
“நீதி கேட்டு தேர்தல் ஆணையரைச் சந்திக்கச் சென்ற எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அநீதி இழைத்துவிட்டுப் பொய்களைச் சரமாரி அடுக்குகிறார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் தந்த விளக்க உரை அனைத்தும் குப்பை. அனைத்தும் பொய். நாங்கள் ஐந்து கடிதங்களைக் கொடுத்தோம். அவர் எதற்கும் பதில் அளிக்கவில்லை,” என்றார் மம்தா பானர்ஜி.
“உங்கள் பதவிக்கு நான் மதிப்பளிக்கிறேன் என்று நான் அவரிடம் சொன்னேன். ஏனென்றால், எந்தப் பதவியும் யாருக்கும் நிரந்தரமல்ல. ஒரு நாள் நீங்கள் வெளியேறத்தான் வேண்டும்.
“ஜனநாயகத்தில் தேர்தல்கள் ஒரு திருவிழா. ஆனால், நீங்கள் 58 லட்சம் பெயர்களை நீக்கிவிட்டீர்கள். அவர்களுக்கு இருக்கும் உரிமையை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை,” என்று மம்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

