அமராவதி: தலைமைத் தேர்தல் ஆணையரையும் மற்ற தேர்தல் ஆணையர்களையும் நியமிப்பது தொடர்பாக இந்திய அரசு கடந்த 2023ல் கொண்டுவந்த சட்டத்துக்கு ஆதரவு அளித்தது தமது கட்சி செய்த தவறு என்று ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதுபவரே தேர்வாளரை (Examiner) நியமிப்பது போன்ற ஒரு நிலையை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியாது என்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் காரசாரமாக விமர்சித்தார்.
ஆளுங்கட்சியின் அதிகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களின் நடுநிலைமை கேள்விக்குறியாகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், 2023 சட்டத் திருத்தத்தின்படி பிரதமர், அவர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுவே தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்கிறது எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.
இக்குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விலக்கப்பட்டு, ஆளுங்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்பு தலைமை நீதிபதி உள்ளடங்கி இருந்த நடுநிலைக் குழு நிலையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் இதேபோன்ற வெளிப்படையான நியமன முறையை மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜெகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ஆந்திராவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் சூழலைச் சுட்டிக்காட்டிய அவர், ஆளும் தெலுங்கு தேசம் கூட்டணி அரசு எதிர்க்கட்சிகளின் மனுக்களை சட்டவிரோதமாக நிராகரிப்பதாகவும் வேட்பாளர்களை அச்சுறுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், ஆந்திராவில் நியாயமான முறையில் தேர்தலை நடத்த மத்தியப் படைகளை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
